தம்மிக்க பெரேராவுக்கு பொதுஜன பெரமுனவிடமிருந்து  சென்றுள்ள பத்து நிபந்தனைகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தம்மிக்க பெரேராவுக்கு பொதுஜன பெரமுனவிடமிருந்து  சென்றுள்ள பத்து நிபந்தனைகள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரபல வர்த்தகரும் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அக்கட்சியின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனை கட்சியின் சில உறுப்பினர்களும் உறுதிப்படுத்தியிருந்தனர்.

என்றாலும், வேட்பாளர் தொடர்பில் எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் கட்யின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அதேபோன்று கட்சியின் பொதுச் செயலாளரும் இந்த கருத்தையே முன்வைத்துள்ளார்.

ஆனால், வர்த்தகர் தம்பிக்க பெரேராவின் பெயரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பெயர் பட்டியலில் உள்ளதாக சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தம்மிக்க பெரேரா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட வேண்டுமென்றார் 10 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென அக்கட்சி கடிவாளம் போட்டுக்களதாக அறிய முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறுவதற்கு, ஏனைய அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கூட்டுச் சேருவதற்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

உலகின் பிற நாடுகளுடன் போட்டியிடக்கூடிய சர்வதேச அளவிலான கல்வியை நாட்டின் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

உலகில் எந்த நாட்டிலும் பணிபுரியும் வகையில், இந்த நாட்டில் தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சர்வதேச அளவில் உயர்த்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்தி, புதிய கலப்பின விதைகளை அறிமுகம் செய்வதன் மூலம் விளைச்சலைப் பெருக்கி, ஸ்மார்ட் விவசாயத்தை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிக்கவும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அந்த பகுதிகளுக்கு பணம் புழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7% ஆக உயர்த்தி பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

பொருட்களின் விலையும், வாழ்க்கைச் செலவும் மக்கள் தாங்கும் அளவிற்கு குறைக்கப்பட வேண்டும். தற்போது, விதிக்கப்பட்டுள்ள வற் வரியை குறைக்க வேண்டும்.

அரசுக்கு சொந்தமான வணிகங்கள் அல்லது அரசு சொத்துக்கள் தனியார்மயமாக்கப்படக்கூடாது. மேலும், தற்போது நஷ்டமடைந்து வரும் அரசு வணிகங்களை இலாபகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

அனைத்து பொதுச் சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த ICT தளம் நிறுவப்பட வேண்டும்.

மோசடி மற்றும் ஊழலைத் தடுக்க, அனைத்து அரசாங்க கொள்முதல் மற்றும் டெண்டர் நடைமுறைகளுக்கும், உலகின் பிற நாடுகளில் உள்ளதைப் போல, பொதுமக்கள் தகவல்களைப் பார்க்கக்கூடிய ஒரு வெளிப்படையான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ஊழல் மற்றும் ஊழல்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் 17 பொதுப் பல்கலைக்கழகங்களையும் சர்வதேச தரவரிசையில் முதல் 1000 இடங்களுக்குள் கொண்டு வர, அந்தப் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். .

சுற்றுலாத்துறையை மேம்படுத்த வருடத்திற்கு 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

இலங்கை மீண்டும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுக்காத வகையில் டொலர்களை ஈட்டும் உத்திகளுடன் கூடிய திட்டவட்டமான புதிய வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு வேட்பாளரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெறுவார் என அக்கட்சி தம்மிக்க பெரேராவிடம் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

அண்மையில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் பசில் ராஜபக்ச, ராஜபக்சக்களுக்கு மத்தியில் முன்வரிசை ஆசனத்தை வழங்கி, தம்மிக்க பெரேராவை உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுன கருதுவதான செய்தியையே வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.