ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் முக்கிய அம்சங்கள்

ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் முக்கிய அம்சங்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (01) இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

குடிவரவு குடியகல்வு பிராந்திய அலுவலகம் திறப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு அலுவலகத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறந்து வைத்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சிறப்பு தபால் தலை மற்றும் முத்திரையும் வெளியிடப்பட்டது.

  

சிறப்பம்சம்

இலங்கையில் இதுவரை பெயர்ப்பலகைகளில் பெயரையும் கட்சியையும் பொறித்துக்கொள்வதற்கு போட்டி போட்ட வரலாறு பற்றி அறிந்திருப்போம். முதற்தடவையாக இந்த பெயர்ப்பலகையில் பொதுமக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட அலுவலகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இதுகுறித்து மக்கள் முகப்புத்தகத்தில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மயிலிட்டி துறைமுக பணிகள் ஆரம்பம்

இதனிடையே, மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் கீழ், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கும், கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள், போன்ற வசதிகள் குளிரூட்டும் வசதிகள், வலை தயாரிக்கும் வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் தகவல் பரிமாற்ற மத்திய நிலைய வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதியின் உரை
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மீனவ சமூகத்தினருக்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் இன்னும் பல மீன்பிடி துறைமுகங்கள் எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும், மீனவ சமூகத்தினருக்கு வலை உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுகளில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.