இஸ்தான்புல்லில் சிங்கத்தைத் தேடிய அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

இஸ்தான்புல்லில் சிங்கத்தைத் தேடிய அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

துருக்கியின் இஸ்தான்புல் நகரின் புறநகர்ப் பகுதியில் பெண் சிங்கம் ஒன்று சுதந்திரமாக நடமாடுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் சுமார் 24 மணிநேரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை எதிர்பாராத திருப்பத்தைச் சந்தித்துள்ளது.

குறித்த பகுதியில் சிங்கம் ஒன்று நடமாடுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, நவம்பர் 22ஆம் திகதி மாலை முதல் அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

இஸ்தான்புல்லின் சாரியர் (Sarıyer) மாவட்டத்திலுள்ள உஸ்கும்ருகோய் (Uskumruköy) பகுதியில் உள்ள வனப்பகுதியில் சிங்கம் போன்ற விலங்கு ஒன்று நடமாடுவதாகக் கண்காணிப்புக் கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதையடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வெப்பநிலையைக் கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் வனப்பகுதி கண்காணிக்கப்பட்டதுடன், தரைவழித் தேடுதல்களும் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், விலங்கைக் கவர்வதற்கான உணவுகள் வைக்கப்பட்டதுடன், அதன் நடமாட்டத்தைக் கண்டறியும் உணர்விக் கண்காணிப்புக் கருவிகளும் பொருத்தப்பட்டன. சுமார் 54 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பெல்கிரேட் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதற்கிடையில், சிங்கம் நடமாடுவதாகக் கூறப்பட்ட பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர்.

எனினும், சுமார் 24 மணிநேரத் தேடுதலின் பின்னர், இஸ்தான்புல் ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது அந்தப் பகுதியில் சிங்கம் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெவ்வேறு கோணங்களில் பதிவான புதிய கண்காணிப்புக் காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் தென்பட்ட விலங்கு சிங்கமோ அல்லது வேறு பெரிய பூனை இனத்தைச் சேர்ந்த விலங்கோ அல்ல என்பது தெரியவந்துள்ளதாகவும் ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அந்தக் காட்சிகளில் பதிவான விலங்கு உண்மையில் என்ன என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை தெளிவான விளக்கத்தை வெளியிடவில்லை.

சிங்கம் ஒன்று தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இறுதியில் அது சிங்கம் அல்ல என அதிகாரிகள் அறிவித்துள்ளமை இஸ்தான்புல் மக்களிடையேயும் சமூக ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.