இந்தியன் முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 !

இந்தியன் முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 !

இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் ஜூலை 12ஆம் திகதியான இன்று  வெளியாகியுள்ளது. முதல் பாகம் வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தியன், இந்த முறையும் அதனை நிகழ்த்துமா?


 2017ல் தனது பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் இறுதியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவித்தார் கமல்ஹாசன். முதலில் ஸ்ரீ வெங்கேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், விரைவிலேயே அந்த நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகிக்கொண்டது.

இதற்குப் பிறகு, சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, தயாரிப்பிற்கு முந்தைய பணிகள் தீவிரமடைந்தன. வழக்கமாக ஷங்கரின் படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மானே இசையமைக்கும் நிலையில், இந்தப் படத்தில் அனிருத் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், படத்தின் தயாரிப்பு பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போனது. பிறகு 2019ஆம் ஆண்டுத் துவக்கத்தில் படத்தின் பணிகள் தொடங்கின. சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, பிரேமானந்தம் ஆகியோர் படத்தில் இணைந்தனர். ஆனால், படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டது. பிறகு 2019ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்குப் பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. பிறகு கோவிட் காலகட்டத்தில் தடை ஏற்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு துவங்கி நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸும் தயாரிப்பில் இணைந்துகொண்டது.

இதற்குப் பின் படப்பிடிப்பு தீவிரமடைந்தது. இந்த ஆண்டு ஏப்ரலில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் தாமதமானதால், ஜூலை 12ஆம் திகதியான இன்று  வெளியாகியாது  இந்தப் படம்.

ஹாங்காங்கிலிருந்து திரும்பும் சேனாபதி, இந்தியாவில் தனது வீடியோக்கள் மூலம் ஊழல்களை அம்பலப்படுத்திவரும் சித்ரா அரவிந்தனுடன் கைகோர்ப்பதைப் போல இந்தப் படத்தின் கதை நகர்கிறது.

இப்போது இந்தியன் படத்தின் மூன்றாவது பாகமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இந்த மூன்றாம் பாகத்திற்கான பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பே தேவைப்படும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த மூன்றாம் பாகம், 2025ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கிறது.

இந்தியன் படத்தின் முதல் பாகம், வெளியானபோது பலவிதங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மிகப் பெரிய பொருட்செலவு, வித்தியாசமான கதைக்களம், பல மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள் என படம் வெளியாகி பல மாதங்களுக்கு இந்தப் படம் பற்றியே பேச்சாக இருந்தது. அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது, சிறந்த கலை இயக்குநருக்கான விருது ஆகியவை இந்தியன் படத்திற்குக் கிடைத்தன.

தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் இந்தப் படம் 150 நாட்களைக் கடந்து ஓடியது. தொலைக்காட்சிகளில் இப்போதும் அந்தப் படத்தின் காட்சிகள் ஒளிபரப்பானால் ரசிகர்கள் வேலைகளை மறந்து, நின்று ரசிக்கிறார்கள்.

இப்போது இந்தியன் -2 வெளியாகியுள்ளது. முதல் பாகத்திற்கும் இதற்கும் இடையில் 28 ஆண்டுகள் கடந்துவிட்டன. முந்தைய பரபரப்பையும் அனுபவத்தையும் இந்தப் படம் தருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.