யாழ். கல்லுண்டாய் மக்களுக்கு தீர்வு - ஆளுநர் வேதநாயகன்

யாழ். கல்லுண்டாய்  மக்களுக்கு தீர்வு - ஆளுநர் வேதநாயகன்

யாழ். மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

கல்லுண்டாயில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்குக் காரணமாக இடம்பெயரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினரால் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது நிலம் நிரவுதல் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது, அருகிலுள்ள கொத்துக்கட்டிக்குளத்தைத் தூர்வாரி, அங்கிருந்து பெறப்படும் மண்ணைப் பயன்படுத்தி கல்லுண்டாய் குடியேற்றப் பகுதியில் நிலம் நிரவுதல் வேலைகளை முன்னெடுப்பது குறித்தும், குடியேற்றத் திட்டத்துக்கு அண்மையாகச் செல்லும் வாய்க்காலைத் தூர்வாருவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும், கொத்துக்கட்டிக்குளத்தைத் தூர்வாரியதன் பின்னர், எதிர்காலத்தில் அதன் பராமரிப்புப் பணிகளை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையிடம் கையளிப்பது தொடர்பான யோசனையும் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளது.