2016 இல் மாயமான விமானம் ; பாகங்கள் கண்டுப்பிடிப்பு

சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆழ்கடல் ஆய்வில் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2016 இல் மாயமான விமானம் ; பாகங்கள் கண்டுப்பிடிப்பு

2016ஆம் ஆண்டு சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போனது.

விமானம் புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார் வரைபடமானது பார்வையில் இருந்து மறைந்தது. இந்நிலையில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய ஆழ்கடல் ஆய்வில் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை புவி அறிவியல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரையில் இருந்து 140 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 11,200 அடி ஆழத்தில் An-32 விமானத்தின் பாகங்கள் இருந்துள்ளன.

கடந்த 2016, ஜூலை 22ஆம் திகதி இந்த விமானம் மாயமானது. அதில் சுமார் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு உலக நாடுகள் தங்களது இராணுவ பயன்பாட்டுக்காக இந்த விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவும் அடங்கும். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஏவியன்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.

கடந்த 1980 முதல் 2012 வரை இந்த விமானம் தயாரிக்கப்பட்டது எனவும் இரட்டை இயந்திரம் கொண்ட இந்த விமானம் மோசமான வானிலையிலும் இயங்கக் கூடிய தன்மை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.