இந்தியாவின் வட மாநிலங்களில் தொடர்ந்து வாட்டியெடுக்கும் கடும் குளிர்

டெல்லி விமான நிலையத்தில் கடும் பனி மூட்டம் நிலவியதால் 100-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்நேற்று வரை 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்திறங்கின.

இந்தியாவின் வட மாநிலங்களில் தொடர்ந்து வாட்டியெடுக்கும் கடும் குளிர்

வட மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன் காரணமாக இம்மாத தொடக்கத்தில் டெல்லி, உ.பி,, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், தொடர்ந்து உறைய வைக்கும் குளிர் நீடிப்பதால் இந்த வாரம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிஹாரில் வரும் 20-ம் தேதிவரை, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல் டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் நேற்று வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. உத்தர பிரதேசத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றும் பல மாநிலங்களில் கடும் குளிர் நீடித்தது. மேலும் கடும் பனி மூட்டமும் இருந்தது. இதன் காரணமாக டெல்லி ரயில் நிலையத்துக்கு வரவேண்டிய ரயில்கள் மிகவும் தாமதமாக வந்தன. இதனால் ரயிலுக்குக் காத்திருந்தவர்களும், ரயில்களில் வருபவர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களும் ரயில் நிலையத்தில் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் கடும் பனி மூட்டம் நிலவியதால் 100-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்நேற்று வரை 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்திறங்கின.

அதேபோல் 100-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி டெல்லி, ஹரியாணா, உத்தரபிரதேசம், பஞ்சாப், கிழக்கு ராஜஸ்தான், பிஹார், மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனி மூட்டமும், கடும் குளிரும் நிலவும் எனத் தெரியவந்துள்ளது.

கடும் பனியால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐஏ) ஏராளமான விமானங்கள் புறப்படுவதற்குத் தாமதமாயின. மேலும் டெல்லிக்கு வரவேண்டிய விமானங்களும் தாமதமாக வந்திறங்கின.


டெல்லியில் நேற்று மட்டும் 53 விமானங்கள் (21 உள்நாட்டு வருகை, 16 உள்நாட்டு புறப்பாடு, 13 வெளிநாட்டு புறப்பாடு, 3 வெளிநாட்டு வருகை) ரத்து செய்யப்பட்டன. மேலும் 120 விமானச் சேவைகள் தாமதமாயின என்று டெல்லி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் காரணமாக நேற்று ஏராளமான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மேலும் சில விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து விமானப் பயணி ஒருவர் கூறும்போது, “நான் செல்ல வேண்டிய விமானம் 2 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. இதில் யாரையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. இந்த விஷயத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது’’ என்றார்.

இதேபோல் டெல்லி ரயில் நிலையத்தில் புரி-நிஜாமுதீன் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், அசாம்கர்-டெல்லி ஜங்ஷன் கைஃபியாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பனிமூட்டம் காரணமாக தாமதமாக வந்தன.

டெல்லியில் குறைந்தபட்ட வெப்பநிலையாக நேற்று 4 டிகிரி செல்சியஸ் பதிவானது. செவ்வாய்க்கிழமை இந்த வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.

அடுத்த சில நாட்களுக்கும் இதேபோன்ற கடும் குளிர், பனிமூட்டம், குளிர் காற்று இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.