ஆப்கானிஸ்தான் போர்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்கள்
பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், ஆப்கானிஸ்தான் மோதல்களில் பாகிஸ்தான் பங்கேற்றது மதம் சார்ந்த காரணங்களுக்காக அல்ல, மாறாக அரசியல் அங்கீகாரம் மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே என்று கூறினார்.
சோவியத்-ஆப்கானிஸ்தான் போரின் போது அது ‘ஜிஹாத்’ என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அது வல்லரசுகளுக்கான போர் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டார்.
9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான போரில் பாகிஸ்தான் இணைந்தது குறித்துப் பேசிய அவர், “நாங்கள் ஒரு தசாப்தம் மட்டுமல்ல, இரண்டு தசாப்தங்களாக நம்மையே வாடகைக்கு விட்டுக் கொண்டோம்,” என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்தப் போர்களை நியாயப்படுத்துவதற்காக பாகிஸ்தான் தனது கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைத்ததாகவும், அந்தத் தவறு இன்றுவரை முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.9/11 தாக்குதலை நடத்தியவர்கள் யாரும் ஆப்கானியர்கள் அல்ல என்றும், அந்தத் தாக்குதலுக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைந்த பிறகு, பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இது குறித்து அமைச்சர் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்
ஆப்கானிஸ்தான் மண்ணில் ‘தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ அமைப்பினர் இருப்பதை தாலிபான்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களை அங்கிருந்து அகற்ற தாலிபான்கள் பாகிஸ்தானிடம் பணம் கேட்டதாக அவர் தெரிவித்தார்.
நிதி உதவி வழங்க பாகிஸ்தான் தயாராக இருந்தாலும், தாலிபான்கள் பாதுகாப்பு குறித்த உறுதியான உத்தரவாதங்களை வழங்க மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.”பாகிஸ்தான் தலைமை கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது. நாம் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் வரை எதையும் மாற்ற முடியாது,” என்று கவாஜா ஆசிஃப் கூறினார். கடந்த கால அரசியல் முடிவுகளுக்காகத் தான் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்
Editor