மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கியம் - அமைச்சர் அனுர கருணாதிலக
மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிப்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் வளர்ச்சிக்கும், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான தேசிய கொள்கையை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட “National EV Charging Infrastructure Policy Stakeholders Consultation Workshop” எனும் கலந்துரையாடல் பணிமனை கொழும்பில் ஆரம்பமானது.
எரிசக்தி அமைச்சு, United Nations Development Programme (UNDP) மற்றும் Climate and Clean Air Coalition (CCAC) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை நிலைத்த ஆற்றல் அதிகாரசபை, தேசிய முறைமை முகாமைத்துவ நிறுவனம், எலெக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா மற்றும் லங்கா எலெக்ட்ரிசிட்டி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், தற்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ள மொத்த வாகனங்களில் மின்சார வாகனங்களின் பங்கு சுமார் 1 சதவீதம் மட்டுமே எனக் குறிப்பிட்டார். அந்த வீதத்தை கணிசமாக உயர்த்தி, அவற்றை சார்ஜ் செய்வதற்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த முடிந்தால், புதைபடிவ எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் பல பில்லியன் ரூபாய்களைச் சேமிக்க முடியும் என்றார்.
மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையை உருவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை விரிவுபடுத்துவதுடன், அதற்கான தெளிவான தேசிய கொள்கை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பணிமனை ஊடாக அரச மற்றும் தனியார் துறைகளின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்று, இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறைசார் மற்றும் நிலையான தேசிய கொள்கையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Editor