ஆப்பிரிக்கக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியது செனகல் - மொரோக்கோவின் வெற்றி இரத்து
2025ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணக் கால்பந்துத் தொடரின் சம்பியன் பட்டத்தை செனகல் மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் செனகல் பெற்ற 1-0 என்ற வெற்றியை இரத்துச் செய்து, மொரோக்கோவுக்கு 3-0 என்ற வெற்றியை வழங்கிய ஆப்பிரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்பின் (CAF) மேன்முறையீட்டுச் சபையின் தீர்மானத்தை விளையாட்டுக்கான சர்வதேசத் தீர்ப்பாயம் (CAS) இரத்துச் செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நவம்பர் 24ஆம் திகதி வழங்கப்பட்ட ஒருமித்த தீர்ப்பின் மூலம், இறுதிப் போட்டியில் களத்தில் பெறப்பட்ட செனகலின் 1-0 வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 18ஆம் திகதி மொரோக்கோவின் ரபாத் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், செனகலும் மொரோக்கோவும் மோதின.
போட்டியின் வழக்கமான நேரத்தின் இறுதிப் பகுதியில் மொரோக்கோவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து செனகல் வீரர்கள் எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 14 நிமிடங்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் மீண்டும் மைதானத்திற்குத் திரும்பிய செனகல் வீரர்கள் போட்டியைத் தொடர்ந்தனர். மொரோக்கோவின் பெனால்டி முயற்சியை செனகல் கோல்காப்பாளர் எட்வார்ட் மெண்டி தடுத்தார்.
தொடர்ந்து மேலதிக நேரத்தில் பாபே குயே அடித்த கோலின் மூலம் செனகல் 1–0 என்ற கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
எனினும், மைதானத்தை விட்டு வெளியேறிய செனகல் வீரர்களின் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 2026 மார்ச் மாதம் ஆப்பிரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்பின் மேன்முறையீட்டுச் சபை செனகல் போட்டியில் தோல்வியடைந்ததாக அறிவித்து, மொரோக்கோவுக்கு 3–0 என்ற வெற்றியை வழங்கியது.
தீர்ப்பை மாற்றிய விளையாட்டுத் தீர்ப்பாயம்
இந்த முடிவுக்கு எதிராக செனகல் கால்பந்துக் கூட்டமைப்பு விளையாட்டுக்கான சர்வதேசத் தீர்ப்பாயத்தில் மேன்முறையீடு செய்தது.
இதனை விசாரித்த மூவரடங்கிய தீர்ப்பாயக் குழு, போட்டியை மீண்டும் தொடர்வதா அல்லது நிரந்தரமாகக் கைவிடுவதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நடுவருக்கே இருப்பதாகக் குறிப்பிட்டது.
போட்டி நடுவர் ஜீன்-ஜாக் ந்தாலா, வீரர்கள் மீண்டும் மைதானத்திற்குத் திரும்பிய பின்னர் போட்டியைத் தொடர அனுமதித்திருந்தார். அவரது அந்தத் தீர்மானத்தில் சட்டரீதியான தவறு எதுவும் இல்லை எனத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், செனகல் போட்டியில் தோல்வியடைந்ததாக அறிவித்த ஆப்பிரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்பின் மேன்முறையீட்டுச் சபைத் தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டு, செனகலின் ஆரம்ப வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் செனகல் தனது இரண்டாவது ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணச் சம்பியன் பட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
தீர்ப்புக்கு எதிராக மொரோக்கோ மேல்முறையீடு செய்யத் தீர்மானம்
விளையாட்டுத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக மொரோக்கோ கால்பந்துக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தீர்ப்பாயத்தின் நடுவர் குழுவில் இடம்பெற்ற ஒருவருக்கும் செனகல் கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையில் முறையற்ற தொடர்பு இருந்ததாகவும் மொரோக்கோ தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், குறித்த குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட தரப்புகள் மறுத்துள்ளன.
இந்நிலையில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஆப்பிரிக்கக் கால்பந்துக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Editor