எல்ல பஸ் விபத்துக்கு காரணம் - உண்மையை கூறிய உதவியாளர்!
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் தங்காலை பிரதேசத்திலிருந்து சுற்றுலா சென்றவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்ற குறித்த வீதியின் 24வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக பதிவாகியுள்ளது.
குறித்த விபத்து நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாரதி மற்றும் சாரதியின் உதவியாளர் உட்பட 34 பேர் பஸ்ஸில் பயணித்துள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. எதிர் திசையில் வந்த அதிசொகுசு மோட்டார் வாகனமொன்றில் மோதி வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி சுமார் 1000 அடி பள்ளத்தில் பஸ் விழுந்துள்ளது.
தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் காயமடைந்தவர்கள் பதுளை, பண்டாரவளை, தியத்தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் ஆண்கள் எனவும், 5 பேர் பெண்கள் எனவும், 3 சிறுவர்கள் உட்பட 2 சிறுமிகள் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 6 பேர் ஆண்கள் என்பதுடன் 9 பெண்கள் உள்ளடங்குகின்றனர். அவர்கள் அனைவரும் தங்காலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த பிரதேசவாசிகள் என்பதுடன் அவர்கள் தங்காலை நகர சபையின் ஊழியர்கள் என்பதுடன் அவர்களின் குடும்பத்தினர் என பிரதியமைச்சர் ருவண் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உயிரழ்ந்தவர்களின் சடலங்கள் தியத்தலாவ, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை அதிக வேகத்தில் பஸ் பயணித்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயிலுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறெனினும் விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் பஸ் வண்டியின் பிரேக் கட்டமைப்பில் கோளாறு இருப்பதாக பஸ்ஸின் பேசப்பட்டதாக சம்பவத்தில் உயிர்பிழைத்த ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘எல்ல பகுதிக்கு அண்மையில் பஸ் பயணிக்கும் போது பஸ்ஸில் பிரேக் இல்லையென கூறப்பட்டது. நான் பஸ்ஸின் பொனட் பகுதியின் மீது அமர்ந்திருந்தேன். சாரதி அவ்வாறு கூறியதற்கு பஸ் நடத்துனர் சிரித்தார். எனக்கு அடுத்திருந்த ஆசனத்தில் ஒருவர் இருந்தார். அவரும் சிரித்தார். பொய் சொல்ல வேண்டாமென கூறினார். அடுத்த வளைவின் போது, உண்மைதான் பஸ்ஸில் பிரேக் இல்லையென கூறப்பட்டது. அதனையடுத்து பஸ் வளைந்து அங்கும் இங்குமாக போக ஆரம்பித்தது. அதன் பின்னர் தான் பஸ்ஸில் பிரேக் இல்லையென்பது உண்மை என அறிந்துகொண்டோம். அதன்போது எதிரே வாகனம் ஒன்று வந்தது.. அதில் மோதிதான் பஸ் இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்தது. அதன்போது நாம் இறந்துவிடுவோம் என்று தான் நான் நினைத்தேன்’.
‘ பஸ் பள்ளத்தில் வீழ்ந்த பின்னர் சிறுவன் அழும் சத்தமொன்று கேட்டது. அந்த சத்தத்திற்கு தான் எனக்கு சுய நினைவு வந்தது. அதன்பின்னர் அந்த பிள்ளையையும் எடுத்துக் கொண்டு மேலே வருவற்கு நான் முயற்சித்தேன். பின்னர் கூச்சலிட்டேன். அதன் பின்னரே மக்கள் அங்கு வந்தனர்.’
இதேவேளை பஸ்ஸில் இருந்தவர்களை மீட்க முயற்சித்த இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்காலை நகர சபையின் செயலாளர் டீ.டபிள்யு.கே.ரூபசேனவும் உள்ளடங்குகின்றார்.
இதேவேளை பஸ் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Editor