மலையக அதிகார சபையை வலுவிழக்கச் செய்யும் அரசின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது
2018ம் ஆண்டு 32ம் இலக்கச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மலையக அதிகாரசபை முறைமையை வலுவிழக்கச் செய்யும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த நாட்டில் வாழுகின்ற வடகிழக்கு தமிழ் மக்களைபோன்றே மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளும் மாறிமாறி நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களினால் மறுக்கப்பட்டு வந்துள்ளமை துரதிஷ்டவசமானது. மலையக மக்களின் உழைப்பு தொடர்ந்தும் சுரண்டப்பட்டு வந்தாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளைக்கூட ஆட்சியாளர்கள் முழுமையாக வழங்கவில்லை என்பதே கசப்பான உண்மையாகும். குறிப்பாக மலையக சமூகத்தினரின் காணி உரிமை, வீட்டு உரிமை, கல்வி உரிமை மற்றும் சுகாதார உரிமை ஆகியவை நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகத்தினருக்கு கிடைப்பது போன்று கிடைக்கவில்லை.
எனவே இந்த உரிமைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மலையக அதிகார சபை எனும் பொறிமுறை உருவாக்கப்பட்டிருந்தது. இது ஒரு ஆரோக்கியமான விடயமாகும். எனினும் ஆட்சி மாற்றங்கள் எற்பட்டதன் காரணமாக அதன் நன்மைகள் மக்களை சென்றடையவில்லை.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்படி அதிகார சபையானது அமைச்சொன்றின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக அறியமுடிகின்றது.
இந்த நாட்டின் நலிவடைந்த சமூகமாகவுள்ள தரப்பினரை ஏனைய சமூகத்தினருக்கு சமமாக கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்ட இந்த அதிகார சபை கட்டமைப்பை வலுப்படுத்துவதை விடுத்து அதனை அமைச்சொன்றின் கீழ் கொண்டுவருவதானது அதனை மேலும் வலுவிழக்கச் செய்வதாக அமைந்துவிடும்.
ஆகவே மலையக சமூகத்தினரும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் நிலைமை உருவாக்கப்படும் வரையாவது இந்த கட்டமைப்பை வலுவிழக்க செய்யகூடாதென அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor