கோட்டாவின் நெருங்கிய தொடர்பாளர் கைதும், பின்னணியும் என்ன?

கோட்டாவின் நெருங்கிய தொடர்பாளர் கைதும், பின்னணியும் என்ன?

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர் இன்று (18) காலை கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின்படி, இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் பதவி வகித்து சம்பளம் பெற்றதாகவும், அதனூடாக அரச நிதிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவர் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராகவும், அதே சமயத்தில் ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகவும் பணியாற்றியதாகவும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு பதவிகளுக்கான சம்பளத்தை பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

அத்துடன், அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் அரச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.