ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய தாக்குதல் அச்சுறுத்தல்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய தாக்குதல் அச்சுறுத்தல்

ஈரானுக்கு எதிராக புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், ஈரான் ஒப்பந்தம் ஒன்றுக்கு வருவதில் ‘புத்திசாலித்தனமாக’ செயற்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

ஈரான் அணு திட்டம் தொடர்பில் இராஜதந்திர தீர்வு ஒன்றை எட்ட முடியும் என்று டிரம்ப் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரொலின் லீவட் குறிப்பிட்டுள்ளார். பிராந்தியத்திற்கு அமெரிக்கா இரண்டாவது போர் கப்பலை அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கும் நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அதேபோன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் அமெரிக்க மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனினும் ஈரான் மீதான தாக்குதலுக்கான சாத்தியங்கள் குறித்து ஆலோசகர்களுடன் டிரம்ப் கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதோடு அவ்வாறான அமெரிக்காவின் தாக்குதல் எதிர்வரும் சனிக்கிழமைக்கு முன் இடம்பெறக் கூடும் என்றும் அந்த செய்திகள் கூறின. 

கடந்த ஆண்டு ஈரானின் மூன்று அணு நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் டிரம்ப் இறுதி முடிவு ஒன்றை எட்டவில்லை என்று நெருங்கிய வட்டாரங்களை மேற்கோள்காட்டி பி.பி.சி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் லீவிட் கடந்த புதனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘ஈரானுக்கு எதிராக தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக பல காரணங்கள் மற்றும் வாதங்கள் உள்ளன. ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்துடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வருவதற்கு ஈரான் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும்’ என்றார்.