நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்: விஷால் தகவல்

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஷால், நடிகர் ஆர்யாவுடன் விஜயகாந்த் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர்: விஷால் தகவல்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிச.28-ம் திகதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு ஏராளமான பிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சில திரை பிரபலங்கள் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்ததால் அவர்களால் வரமுடியாமல் போனது. இதையடுத்து இப்போதுஅவர்கள் விஜயகாந்தின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஷால், நடிகர் ஆர்யாவுடன் விஜயகாந்த் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “விஜயகாந்த் நல்ல மனிதர். தைரியமான அரசியல்வாதி. பொதுவாக நல்ல மனிதரை, அவர் இறந்த பிறகுதான் சாமி என்று சொல்வோம். ஆனால் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே சாமி என்று அழைக்கப்பட்டவர். அவரின் இறுதி ஊர்வலத்
தில் கலந்துகொள்ள முடியாததால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். நடிகர் சங்கக் கட்டிடத்துக்குக் கண்டிப்பாக விஜயகாந்த் பெயர் சூட்டப்படும். அதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 19-ம் திகதி  நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்றார். பிறகு விஜயகாந்த் வீட்டுக்குச் சென்ற விஷால், பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.