நுவரெலியா வாரச் சந்தை குப்பைக் கிடங்காக மாறியது

நுவரெலியா வாரச் சந்தை குப்பைக் கிடங்காக மாறியது

சுற்றுலாப் பயணிகளின் பெரும் வரவேற்பைப் பெற்ற நுவரெலியா நகரின் முக்கிய வர்த்தக நிலையங்களில் ஒன்றான வாரச் சந்தை, தற்போது குப்பைகள் குவிக்கப்படும் இடமாக மாறியுள்ளதுடன், கழிவறைக் கட்டமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளால் பாரிய சுகாதாரப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள இந்த வாரச் சந்தை வளாகத்தில் திண்மக் கழிவுகள் மட்டுமன்றி, கழிவறைகளிலிருந்து வெளியேறும் மலக்கழிவுகளும் பரவி வருவதால் வியாபாரிகள், நுகர்வோர் மற்றும் சந்தைக்கு வருகை தரும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா நகர எல்லைக்குள் சேகரிக்கப்படும் பல்வேறு வகையான திண்மக் கழிவுகள், கட்டட நிர்மாணம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளிலிருந்து அகற்றப்படும் கழிவுகள், வீதிப் புனரமைப்புப் பணிகளின்போது அகற்றப்படும் தார் கலந்த கழிவுகள் உள்ளிட்டவை வாரச் சந்தை வளாகத்தில் கொண்டுவந்து குவிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக சந்தை வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், விற்பனை நிலையங்களைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன. இதனால் அன்றாட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கே பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கழிவறைக் கழிவுகள் சந்தை வளாகத்தில் பரவல்

இதற்கிடையில், சந்தையிலுள்ள கழிவறைக் கட்டமைப்பின் கழிவுநீர்த் தொட்டிகள் நிரம்பி வழிவதால் மலக்கழிவுகள் வளாகம் முழுவதும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகள் மட்டுமன்றி, சந்தைக்கு வருகை தரும் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடத்தில் இவ்வாறான சுகாதாரமற்ற சூழல் நிலவுவது பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வாரச் சந்தை என்பது நகர மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய வர்த்தக நிலையமாகும். இங்கு வியாபாரிகளிடமிருந்து கட்டணங்கள் அறவிடப்படும் நிலையில், சந்தையின் தூய்மை, கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவறை வசதிகளை முறையாகப் பராமரிப்பது மாநகர சபையின் பொறுப்பாகும். எனினும், தற்போதைய நிலைமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பலமுறை சுட்டிக்காட்டியும் தீர்வு இல்லை எனக் குற்றச்சாட்டு

இந்தப் பிரச்சினை அண்மையில் உருவான ஒன்றல்ல எனவும், முந்தைய மாநகர சபை நிர்வாகக் காலங்களிலிருந்தே பல சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் வாயிலாக இது சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய மாநகர சபை நிர்வாகம் பதவியேற்ற பின்னரும் சுமார் மூன்று தடவைகள் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஊடகங்கள் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாகக் கூறும் வியாபாரிகளும் பிரதேச மக்களும், இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நகரின் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்படும் நிலையில், மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள வாரச் சந்தையிலேயே குப்பைகள் குவிக்கப்படுவது முரண்பாடான நிலைமையாக உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்காக தேசிய லொத்தர் சபையிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளைச் சேகரிக்கும் கொள்கலன்களை மாநகர சபை பெற்றுக்கொண்டுள்ள பின்னணியில், சந்தை வளாகத்தில் இவ்வாறு கழிவுகள் குவிக்கப்படுவது குறித்தும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கத் திட்டம் – நகர முதல்வர்

இந்த நிலைமை தொடர்பில் நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேகரவிடம் தொலைபேசி மூலம் வினவியபோது, குறித்த காலப்பகுதியில் வாரச் சந்தை வளாகத்தைப் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தமது நிர்வாகமும் மாநகர சபையும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும், முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தி மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குமாறு கோரியபோது, அதனை வழங்க மாநகர முதல்வர் மறுப்புத் தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கை அவசியம்

இந்நிலையில், சந்தை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுதல், கழிவறைக் கட்டமைப்பின் கழிவுநீர்த் தொட்டிகள் நிரம்பி வழிவதற்கான காரணத்தைக் கண்டறிந்து சீரமைத்தல், முழு வளாகத்தையும் முறையாகச் சுத்திகரித்தல் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படாத வகையில் நிலையான கழிவு முகாமைத்துவத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் அவசியமாகியுள்ளது.

சுற்றுலா நகரமான நுவரெலியாவின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பது தொடர்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், மாநகர சபையின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள வாரச் சந்தையில் வியாபாரிகளும் பொதுமக்களும் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைக்கு ஏன் இதுவரை நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பலமுறை ஊடகங்கள் வாயிலாக இப்பிரச்சினை வெளிக்கொணரப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிருப்தி வெளியிடும் மக்கள், மேலும் ஒரு ஊடக வெளிப்பாடு அல்லது பொதுமக்களின் எதிர்ப்பு உருவாகும் வரை காத்திருக்காமல், நுவரெலியா மாநகர சபை உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

(ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா)