பூமியைப் பாதுகாக்கும் முயற்சியில் விண்வெளி வரலாற்றுச் சாதனை - நூற்றுக்கணக்கான பாறைகளும் கண்டுபிடிப்பு

பூமியைப் பாதுகாக்கும் முயற்சியில் விண்வெளி வரலாற்றுச் சாதனை - நூற்றுக்கணக்கான பாறைகளும் கண்டுபிடிப்பு

பூமியை நோக்கி ஆபத்தான பாதையில் பயணிக்கக்கூடிய சிறுகோள்களின் நகர்வை மாற்ற முடியுமா என்பதைச் சோதிப்பதற்காக நாசா மேற்கொண்ட விண்வெளித் திட்டத்தின் வியக்கத்தக்க முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

2022ஆம் ஆண்டு நாசா அனுப்பிய விண்கலம் மோதிய சிறுகோளின் மேற்பரப்பில், விளையாட்டு மைதானத்தின் அளவுக்கு இணையான பிரமாண்ட பள்ளம் உருவாகியுள்ளதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் (ESA) 'ஹேரா' (Hera) விண்கலம் எடுத்துள்ள புதிய படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

2022ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சோதனை

பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்களால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் நோக்கில், நாசா 'DART' எனப்படும் விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது.

2022 செப்டெம்பர் 26ஆம் திகதி, 'டிமோர்போஸ்' (Dimorphos) எனப்படும் சிறுகோளின் மீது அந்த விண்கலம் திட்டமிட்டு மோதச் செய்யப்பட்டது.

சுமார் 151 மீற்றர் விட்டத்தைக் கொண்ட டிமோர்போஸ், சுமார் 730 மீற்றர் விட்டமுடைய 'டிடிமோஸ்' (Didymos) என்ற பெரிய சிறுகோளைச் சுற்றி வருகிறது.

இந்த மோதலின் மூலம் டிமோர்போஸ் சிறுகோளின் சுற்றுப்பாதைக் காலம் சுமார் 33 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக நாசா உறுதிப்படுத்தியது. விண்வெளியில் உள்ள ஒரு வான்பொருளின் இயக்கத்தை மனிதர்கள் திட்டமிட்டு மாற்றியமைத்த முதல் வெற்றிகரமான சோதனையாக இது அமைந்தது.

மைதானத்தின் அளவில் உருவான பள்ளம்

இந்த மோதலுக்குப் பின்னர் சிறுகோளின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை நேரடியாக ஆராய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 'ஹேரா' விண்கலத்தை அனுப்பியது.

2024ஆம் ஆண்டு ஒக்டோபரில் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், தற்போது டிடிமோஸ் மற்றும் டிமோர்போஸ் சிறுகோள்களை அண்மித்துச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நவம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய படங்கள் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

நாசாவின் விண்கலம் மோதிய டிமோர்போஸின் பக்கமானது முற்றாகத் தட்டையான தோற்றத்தைப் பெற்றுள்ளதுடன், அந்தப் பகுதி முழுவதையும் உள்ளடக்கும் வகையில் பிரமாண்டமான தாக்கப் பள்ளம் உருவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், மோதலின் தாக்கத்தால் டிமோர்போஸ் தனது சுற்றுப்பாதையில் சீரற்ற முறையில் சுழலத் தொடங்கியுள்ளதுடன், அந்தச் சிறுகோள் தொகுதியைச் சுற்றிலும் சில மீற்றர் அளவுடைய நூற்றுக்கணக்கான பாறைகள் மிதந்து கொண்டிருப்பதையும் ஹேரா விண்கலம் கண்டறிந்துள்ளது.

ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுப்பு

தற்போது சிறுகோள்களிலிருந்து சுமார் 25 முதல் 30 கிலோமீற்றர் தொலைவில் இருந்து ஹேரா விண்கலம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அவற்றை மேலும் அண்மித்து உயர்தரப் படங்களைப் பெறுவதற்கும், 2027 ஜனவரியில் சிறிய ஆய்வு செயற்கைக்கோள்களை அனுப்பி சிறுகோள்களின் உட்புற அமைப்பை ஆராய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள் மூலம் சிறுகோள்களின் அமைப்பு, அவற்றின் மீது விண்கலம் மோதும்போது ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆபத்தான சிறுகோள்களின் பாதையை மாற்றுவதற்குத் தேவையான தொழில்நுட்பம் குறித்து மேலதிகத் தகவல்களைப் பெற முடியும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

பூமிக்கு உடனடி ஆபத்து இல்லை

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள டிடிமோஸ் மற்றும் டிமோர்போஸ் ஆகிய இரண்டு சிறுகோள்களும் தற்போது பூமிக்கு மோதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

எனினும், எதிர்காலத்தில் பூமியை நோக்கி ஆபத்தான பாதையில் வரும் சிறுகோள்களைத் திசைதிருப்பும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான முக்கியமான முன்னேற்றமாக இந்த ஆய்வு கருதப்படுகிறது.

சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சிறுகோள் மோதலொன்று பூமியில் பாரிய உயிரின அழிவுக்குக் காரணமாகியதாகக் கருதப்படும் நிலையில், எதிர்காலத்தில் அத்தகைய பேராபத்துகளைத் தவிர்ப்பதற்கான மனிதகுலத்தின் முயற்சியில் இந்த விண்வெளித் திட்டம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.