வருமான வரிக்கு மேலும் நிவாரணம் - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
தனிநபர் வருமான வரியின் அதிகபட்சமான 36 சதவீத வரி விகிதம் அறவிடப்படும் மாதாந்த வருமான வரம்பை 2028ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ரூ.500,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
இன்று (26) கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய வரி அமைப்பின்படி, மாதாந்த வருமானம் ரூ.358,333 ஐத் தாண்டும்போது அதிகபட்சமான 36 சதவீத வருமான வரி அறவிடப்படுகிறது. 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த வரம்பு ரூ.433,333 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதேவேளை, 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் மாதாந்த வருமான வரம்பும் ரூ.150,000 இலிருந்து ரூ.162,500 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
அரச ஊழியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, கோரிக்கைகளுக்குச் சாத்தியமான அளவில் தீர்வுகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
எனினும், அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் எதிர்கால முதலீடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூலதனச் செலவினங்களைக் குறைக்கப் போவதில்லை என உறுதியளித்த ஜனாதிபதி, பல்வேறு கோரிக்கைகள் மூலம் வரவு செலவுத் திட்டத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க சில தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபட்ட நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைத்து இலங்கையர்களினதும் பொதுவான இலக்காக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
Editor