மகிந்தவின் குடும்பத்தில் அடுத்த விசாரணை

மகிந்தவின் குடும்பத்தில் அடுத்த விசாரணை

SupremeSAT செய்மதித் திட்ட ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவிடம் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு இன்று வியாழக்கிழமை சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளது. 

விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு ரோஹித ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பின் பிரகாரம் அவர் இன்று முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளார். 

SupremeSAT செய்மதித் திட்டம் தொடர்பான நிதி நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தத்தின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே ரோஹித ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

இலங்கையின் செய்மதித் தொடர்பாடல் துறையில் தனியார் முதலீட்டின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாக SupremeSAT திட்டம் அமைந்தது. 2012ஆம் ஆண்டு சீன செய்மதியுடன் தொடர்புடைய வகையில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் ரோஹித ராஜபக்ஷவின் பங்களிப்பு தொடர்பாகவும், நிறுவனத்தில் அவர் வகித்த பதவி மற்றும் திட்டத்தின் நிதி ஏற்பாடுகள் குறித்தும் கடந்த காலங்களில் அரசியல் மற்றும் ஊடக மட்டங்களில் பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த பின்புலத்திலேயே இந்த விடயம் தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.