அந்தமான் கடலில் காற்றழுத்தம் - வௌியாகியுள்ள எச்சரிக்கை​

அந்தமான் கடலில் காற்றழுத்தம் - வௌியாகியுள்ள எச்சரிக்கை​

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதியளவில் கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலைமை ஒன்று உருவாகக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (26) பிற்பகல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 30ஆம் திகதியளவில் தெற்கு அந்தமான் கடற்பகுதி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதிகள், தென்கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களை உள்ளடக்கிய பகுதியில் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 2ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தக் கட்டமைப்பு மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான குறைந்தளவிலான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலைத் தரவுகளின் அடிப்படையில், எதிர்வரும் 168 மணித்தியாலங்களுக்குள் இந்த வளிமண்டலக் குழப்பம் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்து மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.