விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த டயானா கமகே
செல்லுபடியாகும் விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஒப்புக்கொண்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி மோகன் செனவிரத்ன, தனது தரப்பினர் குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
2015ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் செல்லுபடியாகும் விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்ததாக டயானா கமகே மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக நடவடிக்கைகளுக்காக 2027ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் தண்டனை அறிவிக்கப்படவுள்ளதுடன், அதற்கு முன்னர் பிரதிவாதியின் கைரேகைகளைப் பெறுவதற்கும், அவை தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், டயானா கமகேவுக்கான தண்டனை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
Editor