பால் விநியோக லொறியிலிருந்து தவறி விழுந்த 13 வயது மாணவி உயிரிழப்பு
நோர்வூட் பகுதியில் பால் விநியோகத்தில் ஈடுபடும் லொறியில் பயணித்த 13 வயது பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று (25) மாலை சுமார் 4.30 மணியளவில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் 50 ஏக்கர் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவி, நோர்வூட் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி பயிலும் விஜேகுமார் ஹரிஸ்னி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாடசாலையில் நடைபெற்ற பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி, பால் விநியோகத்தில் ஈடுபடும் லொறியின் பின்புறத்தில் ஏறிப் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எதிர்பாராத விதமாக லொறியிலிருந்து தவறி வீழ்ந்த மாணவி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த லொறியின் சாரதியும் உதவியாளரும் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(செய்தி - மலைவாஞ்ஞன்)
Editor