கொட்டும் மழையில் போராட்டம் வீதிக்கு இறங்கிய மக்கள்

கொட்டும் மழையில் போராட்டம் வீதிக்கு இறங்கிய மக்கள்

நாகசேனை, ராணிவத்தை மற்றும் பம்பரகலை தோட்டப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகளை உடனடியாகப் புனரமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று (26) கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத குறித்த வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால், அன்றாடப் போக்குவரத்துக்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது, “பாடசாலை செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்து”, “வரி செலுத்தும் மக்களுக்கு தரமான வீதி எங்கே?”, “பாதையால் எம் உயிரைப் பறிக்காதே” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் கோஷமிட்டனர்.

வீதிகளின் மோசமான நிலை காரணமாக வாகனங்கள் பயணிக்க முடியாத சூழல் காணப்படுவதாகவும், இதனால் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், வயோதிபர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நான்கு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் நடந்தே செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், குறித்த பாதைகளில் பயணித்த பல முச்சக்கரவண்டிகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்ணொருவர் பயணத்தின்போது குழந்தையைப் பிரசவிக்க நேர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு கோரி அரசாங்கத்துக்கும் பிரதேச சபைக்கும் பலமுறை கடிதங்கள் மற்றும் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.

பொதுமக்களின் அழைப்பின் பேரில் போராட்ட இடத்துக்குச் சென்ற கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான புஷ்பா விஸ்வநாதன், நீண்டகாலமாகத் தீர்வின்றிக் காணப்படும் இவ்வீதிப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவாகத் தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கச் செயலாளர் மதியழகன் மற்றும் உபதலைவர் பூவலிங்கம் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டு மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

குறித்த தோட்டப் பகுதிகளின் போக்குவரத்துப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்கி, வீதிகளைப் புனரமைத்து மக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதான கோரிக்கையாகும்.

செய்தி - மலைவாஞ்ஞன்