சண்டித்தனம் காட்டி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் தொழிற்சங்கவாதிகளை நம்ப வேண்டாம் - விஜித ஹேரத்

சண்டித்தனம் காட்டி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் தொழிற்சங்கவாதிகளை நம்ப வேண்டாம் - விஜித ஹேரத்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை பணயம் வைத்து சண்டித்தனம் காட்டி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுவரும் பெருந்தோட்ட தொழிற்சங்கவாதிகளை நம்பவேண்டாம் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 கண்டியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட மலையகம் மாநாட்டில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் நெருங்கும்போது ஒரு சிறிய பிரச்சினையைக்கூட பெரிதாக்கி சண்டித்தனம் காட்டும் மலையக அரசியல்வாதிகளை நாம் தொடர்ந்து காண்கிறோம். அவர்கள் அவ்வாறு நாடகமாடி உங்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்று சலுகைகளை அனுபவிக்கின்றனர்.

அது மட்டுமல்லாது இன்னும் ஒரு பிரிவு அரசியல் சார்பான உயர் பதவிகளைப் பெற்றுக் கொள்கின்றது. 
இந்த அரசியல் சூதாட்டத்தில் நீங்கள் பயணம் வைக்கப்படுகின்றீர்கள்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததன் பின் 38 வருடகாலமாக தோட்டத் தொழிலாளர்கள் நாடற்றவர்களாகவே ஆக்கப்பட்டனர். ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வரை வாக்குரிமையோ அல்லது உங்களுக்கென்று ஒரு நாடோ இருக்கவில்லை.

நீங்கள் இந்த நாட்டில் பிறந்தாலும் உங்களுக்கு ஒரு நாடு இருக்கவில்லை. இன்றும் அது வேறு விதமாகி ஒரு அங்குலம் காணியோ, இருக்க ஒரு வீடோ இல்லாத நிலையை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த அரசியல் சூது ஒழிக்கப்படவேண்டும்.

பிரித்தானியர் காலத்தில் இருந்து உங்கள் மூதாதையர்கள் வேலை என்று எதைச் செய்தார்களோ அதனையே நீங்களும் செய்கிறீர்கள். அதனை பரம்பரை, பரம்பரையாக செய்ய நிர்பந்திக்கப்படுகிறீர்கள். 

அன்று கொழுந்து பறித்தவர்கள் சந்ததி இன்றும் கொழுந்துதான் பறிக்கிறது. குறைந்தது உங்கள் சந்ததிக்கு ஒரு மேற்பார்வையாளர் பதவியாவது தோட்டங்களில் விழங்கப்படுவதில்லை என்றார்.