ஆப்கானிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது இந்தியா

ஆப்கானிஸ்தானை இலகுவாக வீழ்த்தியது இந்தியா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 
 
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 08 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

 அணி சார்பில் அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி  80 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா உமர்சாய் 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, 273 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 35 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 131 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

மேலும், இன்றைய ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா இரண்டு உலக சாதனைகளை முறியடித்திருந்தார்.

உலகக்கிண்ணத் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.

இதேவேளை, விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்மூலம் புள்ளிபட்டியலில் இரண்டாமிடத்துக்கு இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நியூசிலாந்து அணி முதல் இடத்தில உள்ளது.