இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலின் மொரீஷியஸ் மற்றும் ரியூனியன் தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் தெற்கு அட்சரேகை 17.78 பாகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 65.82 பாகை என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பாக வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், நிலைமை குறித்த புதிய தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நிலநடுக்கம் தொடர்பாக அதிகாரிகளால் வெளியிடப்படும் மேலதிக அறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைத் தகவல்களைத் தொடர்ந்து கவனிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய கடல் சார்ந்த மாற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நம்பகமான தகவல்களை மாத்திரம் பின்பற்றுமாறும் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் கூறியுள்ளது.