மக்கள் ஆதரவற்ற சட்டவிரோத அரசுக்கே ஜனாதிபதி தலைமைதாங்குகின்றார்; இராதாகிருஸ்ணன் கவலை 

மக்கள் ஆதரவற்ற சட்டவிரோத அரசுக்கே ஜனாதிபதி தலைமைதாங்குகின்றார்; இராதாகிருஸ்ணன் கவலை 

(செய்தி - நுவரெலியா நிருபர்)


நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அனைத்து திட்டங்களும் மொட்டு கட்சியின் தவறான திட்டங்களாகும். அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால் மொட்டு கட்சியின் கொள்கையை தொடர்ந்து செயற்படுத்தப்படும். இதனால் நாடு இதைவிட மிகவும் மோசமான நிலைமைக்கு செல்லும்.

எனவே, ஜனாதிபதி தேர்தலில் சஜித் வெற்றிபெற்றால் மாத்திரமே இந்த நாட்டிற்கும் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் மஸ்கெலியா லக்சபான பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய வே.இராதாகிருஸ்ணன்,

மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுகின்றார், எங்களுடைய கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக் கொள்ள முடியும் என.

அப்படியானால் இப்பொழுது நடைமுறையில் இருக்கின்ற இதே கொள்கையையே தொடர வேண்டும் என்பதையே அவர் குறிப்பிடுகின்றார். ஜனாதிபதி மொட்டு கட்சியின் பிடியில் இருப்பதும் அவர்களுக்கு தேவையான வகையில் அரசாங்கத்தை கொண்டு செல்வதுமே ஜனாதிபதியின் செயற்பாடு.

அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக ரணில் வெற்றி பெற்றால் மீண்டும் மொட்டு கட்சியின் கொள்கையே நாட்டில் ஆட்சி செய்யும். அப்படியானால் இதைவிட மிகவும் மோசமான பொருளாதார கொள்கையே நடைமுறைபடுத்தப்படும்.நாடு மேலும் படுபாதாளத்தை நோக்கி பயணிக்கும்.

எனவே இந்த நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் நிச்சயமாக ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மாத்திரமே மாற்றம் ஏற்படும்.

இன்று சர்வதேச சமூகம் நமக்கு உதவிகளை வழங்குவதை சிந்திக்கின்றார்கள்.நாட்டில் ஜனநாயகம் இல்லை முறையான பொருளாதார கொள்கை இல்லை.அரச செலவினங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை.இப்படி பல குறைபாடுகள் இருக்கின்ற ஒரு நாடாகவே இந்த நாடு இருக்கின்றது.

ஒரு ஜனநாயக தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாக இருந்தால் மாத்திரமே இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.அது தவிர வேறு எந்தவிதமான மாற்று நடவடிக்கையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.