தெற்காசியாவின் முதலாவது காற்றழுத்தக் கூடாரம் கொழும்பு துறைமுக நகரில்
கொழும்பு துறைமுக நகரில் தெற்காசியாவின் முதலாவது காற்றழுத்தக் கூடாரம் (Air Dome) அமைக்கப்பட்டு அதனை இயக்குவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காற்றின் அழுத்தத்தைப் பயன்படுத்தி நிலைநிறுத்தப்படும் இந்தப் பிரமாண்டக் கூடாரத்தின் நிகழ்வுகளில் ஒரே நேரத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தப் பின்னர் இதனை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக CHEC போர்ட் சிட்டி கொழும்பு நிறுவனத்தின் காணி அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதி பொது முகாமையாளருமான ஷலாகா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கூடாரம் சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள், வர்த்தகச் சந்திப்புகள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வுகள் உட்பட பெருமளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. டுபாய் உள்ள சர்வதேச நிகழ்வு மையங்களில் காணப்படும் இத்தகைய வசதிகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்தக் கூடாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரில் இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு மாநாட்டு மையம் அமைக்கப்படும் வரை இந்தக் காற்றழுத்தக் கூடாரம் இடைக்கால நிகழ்வு மையமாகச் செயற்படவுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள நிரந்தர மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் உள்ளக அரங்கில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதியும், வெளிப்புறப் பகுதியில் 5 ஆயிரம் பேர் வரை பங்கேற்கக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது.
எதிர்கால மாநாட்டு மையத்திற்கு அருகில் 400 முதல் 450 அறைகளைக் கொண்ட நட்சத்திரத் தர வர்த்தக ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஷலாகா விஜேநாயக்க கூறியுள்ளார்.
சர்வதேச மாநாடுகள், வர்த்தகக் கண்காட்சிகள் மற்றும் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்கான முக்கிய தளமாக கொழும்பு துறைமுக நகரை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Editor