ஆயுதங்கள் விற்பனை ; தப்பியோடிய பொலிஸ் அதிகாரி - டுபாயில் சிக்கினார்
டி-56 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலொன்றுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் ஊடாக டுபாயில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை விற்பனை செய்த பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.
Editor