விஜித ஹேரத் புதுடில்லிக்குப் பயணம்
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) 25ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (26) இந்தியாவின் புதுடில்லிக்குப் பயணமாகவுள்ளார்.
இலங்கைத் தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கி அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அமைச்சர்கள் பேரவைக் கூட்டம் நாளை (27) புதுடில்லியில் நடைபெறவுள்ளது.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் முக்கூட்டமைப்பில் (IORA Troika) அங்கம் வகிக்கும் இலங்கை, 2023 முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்திருந்தது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்திற்கு முன்னதாக, நவம்பர் 25ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை உயர்மட்ட அதிகாரிகள் குழுவின் கூட்டமும் புதுடில்லியில் நடைபெற்று வருகின்றது.
Editor