முன்கூட்டிய வாக்களிப்பு: உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் - மலையக அரசியல் அரங்கம் கோரிக்கை

முன்கூட்டிய வாக்களிப்பு: உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் - மலையக அரசியல் அரங்கம் கோரிக்கை

வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கு முன்னதாக உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து வாழும் மக்களின் வாக்களிக்கும் வாய்ப்பை உறுதி செய்தல் வேண்டும் என மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் விளக்கமளிக்கையிலேயே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் செய்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரை யாடலின் போது(20/02/2026) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில்,

தேர்தல்களை குறித்த ஒரு நாளில் மாத்திரம் நடாத்தும்போது அருகில் உள்ள வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் வாய்ப்பை ஊரில் வாழும் மக்கள் பெறுகின்றனர்.

ஆனால்,ஊருக்கு வெளியே தலைநகரிலும் பிற நகரங்களிலும் தொழில், படிப்பு பல்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்து செல்வோர் இந்த வாய்ப்பை இழக்கின்றனர்.

குறிப்பாக மலையகத்தில் பல்வேறு காரணங்களினால் இந்த நிலைமை காணப்படுகின்றது. ஊடகவியலாளர்கள், தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவோர் போன்றோரும் இதனால் வாக்களிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கம் தமது தேர்தல் அறிக்கையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இடம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு முன்கூட்டிய வாக்களிப்பு உரிமை வழங்கப்படும் என கூறப்பட்டாலும் இப்போது வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு மாத்திரமே முன்கூட்டிய வாக்களிப்பு வாய்ப்பு வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எமது கோரிக்கை, அரசாங்கம் உறுதியளித்தவாறு முதலில் உள்நாட்டு இடம்பெயர் வாக்காளர்களுக்கும் இந்த ஜனநாயக வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதாகும்.

அதே போல வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுள் யார் யாரெல்லாம் இந்த ஜனநாயக வாய்ப்பைப் பயன்படுத்த முடியும் என்ற வரையறைகளை தெளிவாக வகுக்க வேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிடவேண்டும்.

இதற்காக புலம் பெயர்நதவர்கள் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு க்கு பதிலாக 'வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள்' எனும் பதமே பயன்படுத்த வேண்டும்.

இந்திய அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்கள் மத்தியிலும் இலங்கை தேர்தல் ஆணைக்குழு அபிப்பிராயம் கோரியுள்ளது. அவர்களுள் சுமார் 40000 நாடற்ற இலங்கை மலையகத் தமிழர்களும் வாழ்கின்றனர். அவர்களது அபிப்பிராயங்களை அவர்களது அரசியல் அபிலாஷைகளுடன் இணைத்தே பெறவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.