"வேர்களை தேடி" பயணம்
வேர்கள் துளிர்த்த இடம்" – தமிழகம் ஒரு மறக்கமுடியாத தொடு
(இலங்கை வாழ் இந்திய வம்சத்தினத்தின் நெஞ்சழுந்திய வாழ்த்து)
தூர தேசத்தில் நாங்கள் பிறந்தோம்,
தாய் மொழியோ கனவில் வளர்ந்தது…
ஆனால் ஓர் ஊசல் போல,
எப்போதும் தமிழகம் தான் எங்கள் நிலப்பசுமை.
வேர்கள் மட்டும் தேடவில்லை,
பாசத்தை, அடையாளத்தை, பந்தத்தையும் தேடுகிறது .இந்தத் திட்டம்.
தமிழ்நாடு அரசு நான்காவது முறையாகக் கூறுகிறது
"வா, நீ மட்டும் வந்தால் போதாது –
உன் நெஞ்சம் கொண்டு வா!"
அந்த அழைப்பு எங்களை நெகிழ வைத்தது.
பிறந்ததில்லை என்றாலும்,
தமிழகம் எங்கள் உள்ளத்தில் தொங்கும் தொப்புள் கொடி.
இலங்கையில் வாழும் நாங்கள்,
இந்திய வம்சத்தின் வாரிசுகள்,
இந்த நிகழ்ச்சியில் எங்கள் இடம் உள்ளதென
உணர்வது தான் –
இயற்கையின் மீளக் கிடைத்த உறவுப்பாசம்.
தமிழகம் பேசிக்கொண்டே இருக்கிறது,
"நீங்கள் எங்கிருந்தாலும்,
என் மொழியும், மண்ணும், மரபும் உங்களுக்கே!"
இதயம் பிளந்த பிள்ளைகளுக்கு,
இப்போது வீட்டுக்குள் ஒரு வாசல் திறந்துவிட்டது…
தமிழ்நாடு அரசுக்கு நன்றியும், வாழ்த்தும்!
“வேர்களை தேடி” – இது திட்டமல்ல, பாசத்தின் திருவிழா.
இது நம் இருதயங்களை இணைக்கும் உயிர் நாடி .
தமிழக அரசு நடத்திய "வேர்களை தேடி" பயணத் திட்டம், புலம்பெயர்ந்த தமிழரின் மரபை மீளக் கண்டறிய செய்த உணர்வுபூர்வ நிகழ்வாக மலர்ந்தது.
பண்டைய சோழர் பேரரசின் காலத்திலிருந்தே இலங்கையும் தமிழ்நாடும் கலாச்சாரம், சமயம், வர்த்தகம், மொழி, இசை, சிற்பம் என பலதரப்பட்ட தொடர்புகளில் இணைந்திருக்கின்றன. இந்த வரலாற்றுப் பின்னணியை நினைவூட்டும் வகையில், தமிழக அரசு "வேர்களை தேடி" எனும் திட்டத்தின் கீழ் உலகமெங்கும் வாழும் புலம்பெயர்ந்த இந்தியா வம்சாவளியினரை தாயகத்துடன் மீண்டும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இன்றைய இளைஞர்கள், கனவுகளால் ஊக்கமொளியோடு நகரும் வேளையில், தமிழ் மக்களின் வேர்கள், வரலாறு மற்றும் பாரம்பரியத்தைத் தேடிச் செல்லும் ஒரு முக்கியமான நிகழ்வாக அரங்கேறியது. "வேர்களைத் தேடி" என்ற தொனிப்பொருளில், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஊக்குவிப்புடன், பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் இளைஞர்கள் ஒன்று கூடி, தமிழரசின் பண்பாட்டு அடையாளங்களை மீண்டும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதல்வரின் உறுதியான வழிகாட்டல், "வேர்களைத் தேடி" என்ற பெயரில், தமிழரின் அடையாளப் பார்வைக்கு ஒரு பொற்கதிராய் துளிர்விட்டது. இளைஞர்களின் உள்ளங்களில் ஊக்கமளிக்கும் விதமாக அவர் சொற்றொடர்களும் செயல்பாடுகளும் ஒரு புதிய பொலிவை ஏற்படுத்தின.
2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 15 வரை நடைபெற்ற இந்தப் பயணத்தில், 17 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்கள் பங்கேற்றனர். இலங்கையைச் சேர்ந்த 9 மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர். இப்பயணம் வெறும் சுற்றுலாவல்ல; தமிழின் வாசல் தாண்டி, ஒரு இனத்தின் அடையாளத்தைத் தேடும் கண்ணியமான பயணம்.
????அறிமுக நிகழ்ச்சி மற்றும் அரசுத் தலைவர்களின் வரவேற்பு.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சா.மு. நாசர் அவர்களும் மற்றும்
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையாளர் மாண்புமிகு திரு. வள்ளலார் ஆகியோரின் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பாரம்பரிய தமிழ் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியான ஆரம்பமாக அமைந்தன.
பின்னர் மாணவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க ஸ்டாலின் அவர்களும் மற்றும் துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றனர்.
????பாரம்பரியக்
கோயில்கள் மற்றும் பார்வைச் சுழற்சி
பயணத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று தமிழரின் பாரம்பரிய நினைவிடங்களை நேரில் பார்வையிடுவதாகும்.
மாமல்லபுரம், தஞ்சை, தாராசுரம், சிதம்பரம், மதுரை போன்ற யுனெஸ்கோ பாரம்பரியக் கோயில்கள் அவர்கள் பார்வையைத் திறந்தன. சிற்பக்கலைக்கூடம், ஓலைச்சுவடி பயிலரங்கம், கலைக்கூடங்களும் மாணவர்களுக்கு தமிழ் கலையின் ஆழத்தை உணர்த்தின.
????இயற்கை, கட்டிடக்கலை மற்றும் வரலாற்று தளங்கள்
புதுச்சேரியின் பிரெஞ்சு வரலாற்று சுவடுகள், பிச்சாவரத்தின் மாங்குரங்காடு, கன்னியாகுமரி, பாம்பன் பாலம் போன்ற இடங்கள் பார்வையாளர்களை ஈர்த்தன.
கீழடியில் உள்ள சங்ககால அகழ்வாய்வு தளம், தமிழ் நாகரிகத்தின் தொன்மை மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையை வலுப்படுத்தியது.
????தொழில் வளர்ச்சி மற்றும் ஆன்மீக அனுபவங்கள்
கோயம்புத்தூர், சேலம், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள தொழிற்சாலைகளை பார்வையிட்டு மாணவர்கள் தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கற்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், ராமேஸ்வரம் கோயிலும் ஆன்மீக ஒளியால் மாணவர்களைத் திருப்பின.
????சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் நிறைவு விழா
இந்த பயணத்தின் சிறப்பான ஒரு பகுதி, இந்திய சுதந்திர தினத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் மாணவர்கள் நேரடியாக பங்கேற்றதுதான்.
இந்நிகழ்ச்சி, மாணவர்கள் மனதில் தேசிய ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தியது.
பெரியார் திடலில் நடைபெற்ற நிறைவு விழாவில், மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். அதில் உணர்வுகளும், நன்றிகளும் பெருமையோடு ஒலித்தன. இறுதியில் மாணவர்களுக்கு தமிழ் பண்பாட்டு கலாச்சார தூதுவர் என்று பெயர் பதித்த சான்றிதழும் வழங்கப்பட்டது.
????முடிவுரை
"வேர்களை தேடி" என்பது வெறும் திட்டம் அல்ல, அது ஒரு நெடுந்தொலைப் பாலம். புலம்பெயர்ந்த தமிழர்களை அவர்களது பண்பாட்டு மூலத்துடன் மீண்டும் இணைக்கும் முயற்சியாகவும், நவீன உலகத்தில் தமிழின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் செயலாகவும் இது அமைகிறது.
முக்கியமாக, தமிழ்மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு இவ்வாய்ப்பு தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்பு, தமிழரின் ஒருமித்தமையை மீளவும் வலியுறுத்தியது.
வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சருக்கும், சித்தம் அழகியான் தலைவர், கனடியத் தமிழ்ச்சங்கம் திரு.இராசரத்தினம் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வாய்மையின் ஒளியில் வெற்றி!
தமிழ்மொழி நம் உயிர்!
தமிழ்நாடு நம் பெருமை!
உயர்ந்து வாழ்வோம் தமிழராய்!
தமிழின் பெருமையை உணர்ந்து பகிர்பவள் – நான் விஜயகுமாரன் தர்ஷிகா ✍ இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுக்களுக்குமான தமிழ் கலாச்சார பண்பாடு தூதுவர்.
Editor