நுவரெலியா மாவட்டத்திலேயே குறைந்தளவான பல்கலைக்கழக அனுமதி பதிவாகியுள்ளது

பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து 10,369 மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். இதில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 224 பேர் மாத்திரமே உள்ளடங்கியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்திலேயே குறைந்தளவான பல்கலைக்கழக அனுமதி பதிவாகியுள்ளது

2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றால் பரீட்சைகள் உரிய வேளைக்கு நடத்தப்படுவது தடைபட்டது. அந்நிலைமை இன்று வரை நீடிக்கின்றது. இதனால் மாணவர்கள் மனதளவில் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த வருடம் இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்திலிருந்து 34,191 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த்ததுடன் அவர்களில் 21,031 பேர் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவ்வாறு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டாலும் பலர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியை கொண்டிருக்கவில்லை என்பது முக்கிய குறைபாடாகும்.

இவற்றில் உயிரியல் விஞ்ஞான பிரிவுக்கு 2119 பேரும் இயற்பியல் விஞ்ஞான பிரிவுக்கு 1717 பேரும் வர்த்தகப் பிரிவுக்கு 4804 பேரும் கலைப் பிரிவுக்கு 7858 பேரும் பொறியியல் தொழில்நுட்பத்துக்கு 1182 பேரும் உயிரியல் தொழில்நுட்பத்துக்கு 1222 பேரும் பல்கலைக்கழககங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றிருந்தும் மலையகத்திலிருந்து 600 - 700 வரையான மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றிருந்தனர்.

மத்திய மாகாணத்தில் 2016 - 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானம், இயற்பியல் விஞ்ஞானம், வர்த்தகம், கலை, பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் அமைப்பு தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களின் சதவீதம் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. மாகாண தரவரிசையில் மத்திய மாகாணம் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பின்னடைவை சந்தித்துள்ளதாக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்களின் மூலம் அறிய முடிகின்றது.

2016 - 2020 வரையான காலப்பகுதியில் கலைத்துறையில் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் 1.83 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 1.66 சதவீத அதிகரிப்பும் இயற்பியல் விஞ்ஞான பிரிவில் 5.45 வீத அதிகரிப்பும் வர்த்தகப் பிரிவில் 1.16 வீத அதிகரிப்பும் பொறியியியல் தொழில்நுட்ப பிரிவில் 10.87 வீத அதிகரிப்பும் உயிரியல் அமைப்பு தொழில்நுட்பத்தில் 9.08 வீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இந்த அதிகரிப்பு போதியளவாக காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கூடாக பல்கலைக்கழகங்களிடம் இருந்துப் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பின்வரும் விபரங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.

???? பேராதனை பல்கலைக்கழகம்

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு கண்டி, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் இருந்து 2015 - 2019 ஆம் ஆண்டுக்குட்பட்ட நான்கு கல்வியாண்டுகளில் 3632 மாணவர்கள் கற்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மிகக்குறைந்த மாணவர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மருத்துவப் பிரிவுக்கு மூவர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கலைப் பிரிவுக்கு அதிக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த 21 கற்கைநெறிகளுக்கு கண்டி, கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்திலிருந்து குறைந்தளவானோரே குறித்த கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். (அதிகமானோர் விண்ணப்பிக்காமல் இருந்திருக்கலாம். குறிப்பாக உணவு தொழில்நுட்பம், இயற்பியல் விஞ்ஞானம், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், பார்மசி ஆகிய கற்கைநெறிகளுக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து எவரும் தெரிவாகவில்லை. அதிகபட்சமாக கலைப்பிரிவுக்கு 96 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதே காலப்பகுதியில் கண்டி மாவட்டத்திலிருந்து கலைப்பிரிவுக்கு 511 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். (மேலதிக விபரங்களை அட்டவணையில் காணலாம்)

அத்துடன் குறித்த கல்வியாண்டுகளில் 18 மாணவர்கள் தங்களுடைய பல்கலைக்கழக அனுமதியை இரத்துச் செய்துள்ளனர். அதிகமாக கண்டி மாவட்டத்தில் எட்டு பேரும் நுவரெலியா மாவட்டத்தில் ஒருவரும் இவ்வாறு தங்களது அனுமதியை இரத்துச்செய்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இக்காலப்பகுதியில் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து 10,369 மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். இதில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த 224 பேர் மாத்திரமே உள்ளடங்கியுள்ளனர்.

???? ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் 2017 - 2020 வரையான மூன்று கல்வியாண்டுகளுக்கு பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து 774 மாணவர்கள் ஐந்து கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பதுளை மாவட்டத்திலிருந்து 139 மாணவர்களும் கண்டி மாவட்டத்திலிருந்து 239 மாணவர்களும் நுவரெலியா மாவட்டத்திலிருந்து 44 மாணவர்களும் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 352 மாணவர்களும் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். (அட்டவணை 02)

தொடரும்…


ஆக்கம் - பிரசன்ன (தினக்குரல்)