சஜித்துடன் இ.தொ.கா இணைந்தால் அதனை வரவேற்போம் - திகாம்பரம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய விரும்பினால் அதனை நாம் வரவேற்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
சூரியனின் விழுதுகள் நிழச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்கும் வாக்குகள் வீணாகவே செல்லும். வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள அவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது அவர்களது தனிப்பட்ட உரிமை. அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், சஜித்தின் வெற்றியில் பங்கெடுத்தால் எதிர்காலத்தில் பல விடயங்களை வெற்றிக்கொள்ள முடியும். குறிப்பாக 13ஆவது திருத்தச்சட்டத்தை அவர் அமுல் படுத்துவேன் எனக் கூறியுள்ளார்.
இதேவேளை, நடைபெறுவது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. ஜனாதிபதி தேர்தல் என்பதால் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையலாம். இ.தொ.கா இணைந்தால் அதற்கு நாம் எதிர்ப்பை வெளியிட போவதில்லை. அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என நாம் சஜித்திடம் கோரப்போவதும் இல்லை.
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இணைக்க முற்பட்டால் அதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடலாம். எனவே, இ.தொ.கா ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க விரும்பினால் அதனை நாம் எதிர்க்கப்போவதில்லை.” என்றார்.