இலங்கையை ஆட்சி செய்வது ஜனாதிபதியா? ராஜபக்சர்களா? 

இலங்கையை ஆட்சி செய்வது ஜனாதிபதியா? ராஜபக்சர்களா? 

அரசாங்கத்தை கொண்டு செல்வது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது ராஜபக்சர் சகோதரர்களா? அல்லது சர்வதேச நாணய நிதியமா? என்ற கேள்வி மக்களுக்கு எழுந்துள்ளது.அதற்கு காரணம் ஜனாதிபதி ஒரு கொள்கையிலும் அமைச்சர்கள் சிலர் அவர்கள் தனிக் கொள்கையிலும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் ஒரு கொள்கையிலும் சர்வதேச நாணய நிதியம் ஒரு கொள்கையிலும் இருக்கின்றது. எனவே யாருடைய கொள்கையில் ஆட்சி நடைபெறுகின்றத என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்று கடந்த மஸ்கெலியா லிது மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய இராதாகிருஸ்ணன்,

நாள்தோறும் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.ஆனால் யாருடைய சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை.குறிப்பாக மலையக மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.பெருந்தோட்டங்களில் வேலை நாட்களும் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலைமையில் தங்களுடைய வருமானத்தில் என்ன செய்வது என்பதை தெரியாமல் மக்கள் திண்டாடுகின்றார்கள்.உணவு பாடசாலை செலவினங்கள் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டு நேர உணவையும் உட்கொள்ள முடியாது துர்பாக்கியமான நிலைமைக்கு மக்கள் சென்றிருக்கின்றார்கள்.

எந்த ஒரு நிவாரணமும் பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை.அரசாங்கம் பெருந்தோட்ட மக்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.அவர்களுக்கென ஏன் ஒரு விசேட திட்டத்தை அமுல்படுத்த முடியாது.

இன்று கொட்டும் மலையிலும் கொலுத்தும் வெயிலிலும் தங்களுடைய உழைப்பை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள்.அவர்களுடைய உழைப்பு முழுவதும் டாலராக இந்த நாட்டிற்கு கிடைக்கின்றது.ஆனால் அவர்களுக்கு கிடைப்பதோ ஒரு சொச்சம் மிச்சமெல்லாம் கம்பனிகாரர்கள் தங்களுடைய சுகபோக வாழ்க்கைக்காகவும் அதிக இலாபத்தையும் பெற்றுக் கொள்கின்றார்கள்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பு கடந்த 200 வருடங்களாக சுரண்டப்படுகின்றது.இன்னும் எத்தனை காலத்திற்கு எங்களுடைய மக்கள் இப்படி இருப்பார்கள்.இது மனிதாபிமானமற்ற ஒரு செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அது மாத்திரம் அல்லாமல் மது எனும் அரக்கன் மலையகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றது.புதிது புதிதாக மதுபானசாலைகளை அரசாங்கம் மலையக மெங்கும் அமைக்க தயாராகியுள்ளது.இதற்கு எங்களில் சிலரும் துணைபோகின்றார்கள்.அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு.இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.இல்லாவிட்டால் மலையகம் தழுவிய போராட்டத்தை மலையக மக்கள் முன்னணி முன்னெடுக்க தயங்காது.

எங்களை பொறுத்த வரையில் போராட்டமும் அகிம்சை போராட்டமும் புதியவிடயமல்ல.இந்த மதுபான சாலைகளுக்கு எதிராக மலையக இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும்.அப்படி செய்தால் மாத்திரமே அதனை தடுக்க முடியும் என்றார்.