நடுக்கடலில் தத்தளித்த கப்பல் - கைகொடுத்த இலங்கை​

நடுக்கடலில் தத்தளித்த கப்பல் - கைகொடுத்த இலங்கை​

நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது இயந்திர அறைக்குள் நீர் புகுந்து தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான சைப்ரஸ் நாட்டின் சரக்குக் கப்பலொன்று பழுதுபார்ப்புப் பணிகளுக்காக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமார் 160 மீற்றர் நீளமுடைய இக்கப்பல் சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமானது இதன் பெயர் MV AAL Gibraltar என்பதாகும். சம்பவம் இடம்பெற்றபோது சுமார் 23,000 தொன் சரக்குகளை கப்பல் ஏற்றிச் சென்றுள்ளதாக துறைமுகம் நிர்வாகம் கூறியுள்ளது.

கப்பலின் இயந்திர அறைக்குள் நீர் புகுந்ததைத் தொடர்ந்து அதன் இயந்திரச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு நடுக்கடலில் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தகவலை அறிந்தவுடன் கடற்படையின் ஊடாக பாதுகாப்பான முறையில் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், நான்கு இழுவைப் படகுகளின் உதவியுடன் கப்பல் இவ்வாறு துறைமுகத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

துறைமுகத்திற்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெறும் நோக்கில் கடலுக்கு அப்பால் காத்திருந்தபோது மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கப்பலுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகவும் ஹம்பாந்தோட்டை  துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது கப்பல் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பலின் பழுதுபார்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அதன் உள்ளூர் கப்பல் முகவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.