கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம்
கொள்கலன் விடுவிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக வளாகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை வௌியேற்றுவதிலும், அவற்றை துறைமுகத்திற்கு வௌியேயுள்ள முனையங்களில் பரிசோதிப்பதிலும் இவ்வாறு பாரிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒருகொடவத்தை கொள்கலன் வளாகத்திலும் நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், கொள்கலன் ஊர்தி சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
கொள்கலன்களை விடுவிப்பதற்கான வினைத்திறனான முறைமை இல்லாமை உள்ளிட்ட விடயங்கள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த மாதத்தில் அதிகளவிலான கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதால், இந்த நெரிசல் மேலும் தீவிரமடையக்கூடும் என சனத் மஞ்சுள மேலும் கூறியுள்ளார்.
எனவே, பாதுகாப்புப் பிரிவினரைப் பயன்படுத்தியாவது இந்த நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது கொள்கலன் விடுவிப்பில் சில நெரிசல்கள் காணப்பட்ட போதிலும், அது ஒரு சாதாரண நிலையே என சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா கூறியுள்ளார்.
Editor